சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி நேற்றிரவு (ஜன.11) பூந்தமல்லியிலிருந்து கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, ஆந்திரா, பெங்களூர், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டன.
முதல் நாளான நேற்று 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெறுதல், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காதது போன்ற காரணத்தால் குறைந்த அளவிலான பயணிகளே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
பெரும்பாலான சென்னை மாநகர பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆங்காங்கே சாலை நடுவே தடுப்புகள் அமைத்துள்ளதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பூந்தமல்லி பஸ் நிலையம் வழியாக கன ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம், சமூக விலகலை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். நாளை (ஜன. 13) போகிப் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது - தெளிவான பதில் சொன்ன டாஸ்மாக் நிர்வாகம்