சென்னை: நந்தனம் சிக்னலில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் சக்திவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை பெருநகர காவல் துறை சார்பாக திருத்தி அமைக்கப்பட்ட அபராதத்தொகை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோர் மீதான அபராதத்தொகை விதிக்கும் நடைமுறை சென்னை மாநகரம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி காலை முதல் 80 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கருவிகளை புதிய நடைமுறைக்கு அப்டேட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய மோட்டார் வாகனச்சட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகின்ற 28ஆம் தேதி முதல் 100 விழுக்காடு முழுமையாக 350க்கும் மேற்பட்ட அப்டேட் செய்யப்பட்ட மிசின்களைக் கொண்டு சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து வாகன பரிசோதனை இடங்களிலும் விதி மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலிக்கப்படும். விபத்துகளைத் தடுப்பதே நம் நோக்கம். சட்டத்திருத்தத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து காவலர்கள் புதிய மோட்டார் வாகன சட்ட விதியை பொதுமக்களிடம் எடுத்துக்கூற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனப்பரிசோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களிடம் கேமராக்கள் உள்ளன. பொதுமக்கள் காவல் துறையினர் உரையாடல் முழுமையாக அதில் பதிவாகும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாது இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்பவர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் : தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்