திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அந்தோணி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு செந்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், கார்முகிலன் (7) சன்மதி (4) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த இவரது நான்கு வயது மகள் சன்மதி அவர்களின் வீட்டின் பின்புறத்திலிருந்த கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவினரும், முன்னாள் ராணுவ வீரருமான மீனாட்சி சுந்தரம்(60) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மீனாட்சிசுந்தரத்தை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இன்று காலை நாகம்மை நகர், அந்தோணி நகர் ஆகிய நகர்களை சார்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் எதிரே உள்ள சி.டி.எச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மீனாட்சி சுந்தரத்தின் மீது கடுமையான சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். பின்னர் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதே போன்று கொலையாளி மீனாட்சிசுந்தரத்தின் வீட்டின் முன்பாகவும் 50மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.