சென்னை: கடந்த 2011 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது, பேருந்து நிலையங்களில் குறைந்த விலைக்கு குடிநீர் வழங்கும் அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்த விலையில் குடிநீர் விற்பனை
இவை வெளி மாவட்டங்கள், வெளி மாநிலம் செல்லும் தமிழ்நாடு அரசின் பேருந்து நிலையங்கள், மாநகரப் போக்குவரத்துக் கழங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.1 லிட்டர் தண்ணீர் 10 ரூபாய் என விற்பனையானது.
பொதுவாக, பொதுப் போக்குவரத்து நிலையங்களில் தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். ஆனால்,
குறைவான விலைக்கு, தரமான தண்ணீரை அரசே விற்பனை செய்து வந்ததால், இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், பொதுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அப்போது அம்மா குடிநீர் விற்பனையும் நிறுத்தப்பட்டது.
பின் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அம்மா குடிநீர் பாட்டில்கள் மீண்டும் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொது மக்களின் கருத்து
இது குறித்து சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த தேவேந்திரன் கூறுகையில், “முன்பு ஒவ்வொரு பயணத்தின் போதும் அம்மா குடிநீரை வாங்குவேன். தற்போது அது விற்பனை செய்யப்படாததால் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது” என்றார்.
இதையடுத்து பயணி ராஜேந்திரன் கூறியதாவது, “தற்போது அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் 30 முதல் 40 ரூபாய் கொடுத்து தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.
பல இடங்களில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் வியாபாரிகள் தண்ணீரை விற்பனை செய்கின்றனர். அப்படி வாங்குவதிலும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் பல்வேறு போலி நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை விற்கின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து கேயம்பேடு பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர் பழனி பேசுகையில், “முன்பு அம்மா குடிநீர் விற்பனை செய்யப்பட்டபோது, பொதுமக்கள் வரிசையில் நின்று அதனை வாங்கிச் சென்றனர். அவை இல்லாததால் தண்ணீர் தொட்டியில் பிடித்துக் குடிக்கிறோம்” என்று கூறினார். எனவே அம்மா குடிநீர் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.