தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஆக் 21) முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில் 23ஆம் தேதி முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுகள்
இந்த ஊரடங்கில், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை இரவு 09.00 மணிவரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளும் 23ஆம் தேதி முதல் இரவு 10.00 மணிவரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு அனுமதி
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், கடற்கரை ஆகியவை மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடமான கடற்கரை, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், உத்தரவை மீறி வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது கரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைவதால் தமிழ்நாடு அரசு, ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துள்ளது.
அதன் அடிப்படையில் கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - தியேட்டர்களுக்கு அனுமதி