நல வாரியங்களில் பதிவு செய்யப்படாத, பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும், நிவாரண உதவி வழங்கக்கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இவ்வழக்குகளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”கரோனா ஊரடங்கு சூழலில் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை, நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பதிவை புதுப்பிக்காதவர்களுக்கும், பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஆயிரம் ரூபாய், மே மாதத்தில் ஆயிரம் ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக ஜூன் மாதத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் என இருதரப்புமே இதில் பயன்பெற்றிருக்கக் கூடும்” எனத் தெரிவித்தார்.
”12.13 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் இருந்த மூன்றாயிரத்து, 200 கோடி நிதியிலிருந்து 343 கோடி ரூபாய் கரோனா காலத்தில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக இருந்தால், அது தவறாக பயன்படுத்திக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்டுமானத் துறையில் 50 லட்சம் பேர், இதர துறைகளில் ஒரு கோடி பேர் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாக இருப்பார்கள் என அரசு கருதுகிறது.
இதுவரை பதிவு செய்து கொள்ளாத தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அடுத்த மாதத்திலிருந்து அரசு வழங்கும் நிவாரண உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.
இந்த வழக்கு இன்று (ஆக. 26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதியான கட்டுமானத் தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.