தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு போன்றவற்றை பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், கையெழுத்திடாமல் முக்கிய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே, போராட்டத்தை தீவிரமாக்கும் நோக்கில் செயல்படும் மருத்துவர்களின் பணியிடங்களை காலியானதாக அறிவித்து, அந்த பணியிடத்தில் புதிய மருத்துவர்களை நியமித்து மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக அந்த இடத்தில் பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொடர்ந்து காலிப்பணியிடங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.