தனிநபர் சொத்து பாகப்பிரிவினை வழக்கு - நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்! - chennai high court news
தனிநபர் சொத்து பாகப்பிரிவினை வழக்கில் யார் யாருக்கு எந்தெந்த சொத்து என்பதை இறுதி தீர்ப்பாணை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியரை நியமிக்கலாமா வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கலாமா என்பதை முடிவு செய்ய இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்குப் பரிந்துரைத்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
![தனிநபர் சொத்து பாகப்பிரிவினை வழக்கு - நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்! Property distribution case transfer to chief court hearing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10615841-229-10615841-1613231885558.jpg?imwidth=3840)
சென்னை: பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில், யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்து முதல் நிலை தீர்ப்பாணையை பிறப்பிக்கும்.
இதைத்தொடர்ந்து, யார் யாருக்கு எந்தெந்த சொத்துகள் என்று பாகப்பிரிவினை செய்ய வழக்கறிஞர் ஆணையரை நீதிமன்றம் நியமிக்கிறது. அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், யார் யாருக்கு எந்த சொத்துகள் என்று இறுதி தீர்ப்பாணையை நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது.
ஆனால், உரிமையியல் நடைமுறை சட்டப்படி, மாவட்ட ஆட்சியர்தான், யார் யாருக்கு எந்தெந்த சொத்துகள் என்று முடிவு செய்து அறிக்கை தர அதிகாரம் உள்ளதாகவும், இந்த பணியை மேற்கொள்ள வழக்கறிஞர் ஆணையர்களை நியமிக்கச் சட்டத்தில் இடமில்லை எனக் கூறி, நாமக்கல்லைச் சேர்ந்த சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், உரிமையில் நடைமுறைச் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தான் இந்த பணியை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளபோதும், பாகப்பிரிவினை வழக்கில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தீர்ப்பு அளித்துள்ளதால் சொத்துகளை பிரிக்கும் பணிக்கு ஆட்சியரை நியமிக்க வேண்டுமா அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறி, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.