சென்னை: ஒமைக்ரான் தொற்று குறித்து கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவத்துறை பேராசிரியர் பரந்தாமன் கூறும்போது, "தென் ஆப்ரிக்காவில் புதியதாக உருமாறிய ஒமைக்ரான் என்ற கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலக சுகாதார மையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இந்த உருமாறிய கரோனா வைரஸ் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளதை கண்டறிந்தனர்.
ஏற்கெனவே உருமாறிய கரோனா வைரஸ் டெல்டா 17 முறை உருமாற்றம் அடைந்தது. ஆனால் ஒமைக்ரான் வைரஸ் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் வேகமாக பரவுகிறது. இந்த கரோனா வைரசும் பிற கரோனா வைரஸ் போன்றது தான். இதனால் பாதிப்புகள் அதிகளவில் இல்லாமல் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
ஒமைக்ரான் தொற்றின் அறிகுறிகள்
ஒமைக்ரான் கரோனா வைரஸ் அறிகுறிகளாக தொண்டை கரகரப்பு, உடல் வலி, உடல் சோர்வு போன்றவையுடன், லேசான வறட்டு இருமல் போன்றவை காணப்படும். காய்ச்சல் லேசாக இருக்கலாம். உடனடியாக அறிகுறிகள் தெரியாமல் இருப்பதால், சிலர் தீவிரம் அடைந்தப்பின்னர் தான் வருகின்றனர் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அறிகுறிகள் லேசாக இருப்பதை கண்டறிந்த உடன், பரிசோதனை செய்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் நமக்கு வந்தாலும் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு வருமா?
ஒமைக்ரான் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தாக கண்டறியப்படவில்லை. எனவே அனைவரும் முழுவதுமான 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று வந்தவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் கண்டறியப்படவில்லை. உலக சுகாதார அமைப்பு வீட்டில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தகுந்த இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் மூலம் தான் பரவுகிறது. எனவே முடிந்தவரையில் வெளி நாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும்.
எந்த சோதனையில் உறுதிபடுத்தலாம்?
தமிழ்நாட்டில் செய்யப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் ஸ்பைக் புரோட்டினில் தான் ஒமைக்ரான் வைரஸ் மாற்றம் அடைந்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டறிய முடியும்.
கரோனா வைரஸ் தொற்றுக்காக கண்டறியப்பட்டு போடப்படும் தடுப்பூசியை போட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் தற்போது உள்ள தடுப்பூசியில் கூடுதலாக ஆன்டிஜென் அதிகரிக்கும் வகையில் தயார் செய்து போட வேண்டும். அதனை எளிதில் கண்டறிய முடியும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தீவிரமான நிலையில் வருகின்றனர். அவர்களுக்கு எக்ஸ்ரே, சிடி போன்றவை எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிகிச்சையில் தீர்வு கிட்டுமா?
சில நோயாளிகளுக்கு கோவிட் நிமோனியா மற்றும் இதய பாதிப்பும் சேர்ந்து வருகிறது. தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டு வருகின்றனர். குளிர்காலம் தொடங்கி உள்ளதால் காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.
நிமோனியாவை விட கோவிட் இருக்கிறதா? என்பதற்கான சந்தேகத்தின் அடிப்படையில் வருபவர்கள் தான் அதிகளவில் இருக்கின்றனர். ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையை தொடங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்; விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை