சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் சாதிய வன்மத்தினால் ஏற்பட்டதா? என்பது குறித்தும், வன்முறையான திரைப்படங்கள் மாணவர்கள் மனதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு இளஞ்சிறார் குற்றங்கள் 30 ஆயிரத்து 909 என பதிவாகியது. 2021ல் 26 ஆயிரத்து 692 ஆக இளஞ்சிறார் குற்றங்கள் பதிவாகி உள்ளன. அதில் 40 சதவீதத்திற்கு மேல் சொத்துகள் சார்ந்த குற்றங்கள். தமிழ்நாட்டில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை 1788 ஆகும். சிறப்பு மற்றும் உள்ளுர் சட்டங்களின் கீழ் 424 குற்றங்களும் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 2,212 இளங்சிறார் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. வன்முறை, கர்பழித்தல் போன்ற குற்றங்கள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனை நியாப்படுத்த முடியாது. 2021 ல் இளஞ்சிறார் செய்த கொலைகள் 84, காெலை முயற்சி வழக்கு 102, திருட்டு 481 என்ற நிலையில் இருக்கின்றது. குழந்தைகள் குற்றங்கள் செய்வதற்கான காரணத்தை பொதுவாக பார்க்க முடியாது. ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கலாம்.
வன்முறை சார்ந்த குற்றங்களுக்கு தனிமனிதனின் பாதிப்பு அல்லது சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளாக இருக்கலாம். வயதில் மூத்தவர்களை போலத்தான் குழந்தைகளும் இருக்கின்றனர். ஒருவர் திடீரென்று வன்முறையாளராக உருவாக்கப்படுவதில்லை குழந்தைப் பருவத்தில் இருந்தே உருவாக்கப்படுகின்றது. ஒருவர் வன்முறையாளராக மாற்றுவதில் சமூகத்தில் நடைபெறும் செயல்பாடுகளும் பங்கு பெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தில் அந்த சிறுவர்கள் சாதியுடன் தங்களை அடையாளப்படுத்திக் காெண்டுள்ளனர். அவர்களின் வகுப்பு தோழர்களை சக மனிதராக பார்ப்பதற்கு பதிலாக, சாதியம் மேலோங்கி அவரை விரோதத்துடன் பார்க்க செய்துள்ளது. அதனை நியாயப்படுத்தமுடியாது. அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. அது சமூகம், கலாச்சாரம் சார்ந்ததுடன், பிற காரணங்களும் இருக்கும் என பார்க்கிறேன்.
மாணவர்களிடம் வன்முறையில் ஈடுப்படக்கூடாது என்ற விழிப்புணர்வை பள்ளிகள், சமுதாயத்தில் உருவாக்க வேண்டும். இந்த வன்முறை எண்ணங்கள் ஒரே நாளில் உருவாக்கப்பட்டது கிடையாது. ஒரே நாளில் திருத்தவும் முடியாது. முன்பு சினிமா மட்டும் இருந்த நிலையில், தற்பொழுது சமூகவலைத்தளங்கள் போன்றவையும் மாணவ சமூகத்தை பாதிக்கிறது.
எனவே மாணவர்களுடன் ஆசிரியர்கள் இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டி உள்ளது. மாணவர்களிடம் நல்வழிப்படுத்தும் வகையில் பேச வேண்டும். வேலை வாய்ப்பினை மட்டும் உருவாக்கும் வகையில் இல்லாமல், நல்வழிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான சூழலை பள்ளியில் உருவாக்கித் தர வேண்டும்.
தற்பொழுது உள்ள மாணவர்கள் சினிமாவில் காட்டும் வன்முறையை எடுத்துக் கொள்வதில்லை. சினிமாவை 1000 பேர் பார்த்தால் அவர்கள் எல்லோரும் அதனை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே அதனை திரும்பவும் செய்கின்றனர். சிறார்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கும் சினிமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவே முழுமையான காரணமாக இருக்க முடியாது.
குடும்பம், பள்ளிகள், சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் போன்றையும் வன்முறைக்கான காரணங்களாக உள்ளது. எனவே ஒவ்வொரு வகையான குற்றச்செயலுக்கும் ஒவ்வொரு வகையான காரணம் இருக்கும் போது அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
குற்றவியல் நிபுணர்கள் பார்வையில், குற்றம் செய்பவர்கள் வேறு இடங்களில் அடைக்கப்பட்டால் அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தவறு செய்த மற்ற குழந்தைகளுடன் பழகுவது, அங்கு அவரை நடத்தும் முறைகள் போன்றவையும் காரணங்களாக அமைகின்றன. எனவே கூர்நோக்கு இல்லம் உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு அனுப்பும் குழந்தைகள் திருந்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கிறது.
நாங்குநேரி சம்பவம் அரிதான சம்பவம்தான். இது ஒரு நாளில் நடந்திருக்காது. சமூகத்திலும், அவரின் குடுத்தினரும் கண்டித்து இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ளவர்களும் இச்சம்பத்திற்கு காரணமாக இருக்கலாம். இவர் தற்பொழுது வெளிப்படுத்தி விட்டார். மற்றவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். எனவே தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு மாதத்தில் 11 கொலைகள்..! என்ன நடக்கிறது திருநெல்வேலியில்?