தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல், வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது. பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. ராசா, அந்தியூர் ப. செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவில் திமுகவை சேராத ஒருவர் இடம்பெற்றுள்ளார். அவர்தான், பேராசிரியர் அ. ராமசாமி ஆவார்.
தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவரான அவர், 26 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், துணை வேந்தர், மாநில உயர் கல்விமன்ற துணைத்தலைவர் என பல பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடந்த 1965ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரி மாணவர் தலைவராக இருந்த அவர், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
முந்தைய தேர்தல்களில், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கல்விக்கொள்கை குறித்த பொறுப்புகளை வகித்துள்ளார். மொழி விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் இவர் முக்கிய பங்காற்றுவார் எனக் கூறப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ராமசாமி, கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.