வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும், சீமான் காவல்துறை உயர் அலுவலராகவும் நடித்துள்ளார். லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். இந்த படம் இன்று (அக்டோபர் 11) வெளியாக இருந்த நிலையில், எதிர்பாராத சில காரணங்களால் இன்று ரிலீஸாகவில்லை.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் ரவீந்திரன் சந்திரசேகர் பேசியதாவது, சமூக கருத்துக்காகவே ‘மிக மிக அவசரம்’ படத்தை சுரேஷ் காமாட்சியிடம் இருந்து விலை கொடுத்து வாங்கினேன். இப்படத்தை இன்று வெளியிட வேண்டுமென்று ஒரு மாதம் முன்பே முடிவு செய்துவிட்டேன். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்திலும் தெரிவித்தேன். பின் படத்திற்கான புரமோஷன் வேலைகளில் இறங்கினேன். இப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு நல்ல படத்திற்கு இவ்வளவு குறைந்த தியேட்டர்கள் கிடைத்தால் எப்படி அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும், தயாரிப்பாளருக்கும் படத்தை வெளியிட்டவருக்கும் அதில் என்ன வருமானம் கிடைத்துவிடும்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நான் முடிவு செய்தபோது இந்த தேதியில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகும் அறிகுறியே இல்லை. சில நாட்களுக்கு முன்பு தான், இன்று ரிலீசாகி இருக்கும் சில படங்களின் ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.இத்தனைக்கும் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள முக்கியமான 9 விநியோகஸ்தர்களிடம் ரிலீஸ் செய்யும் பொறுப்பை பிரித்துக்கொடுத்து இருந்தேன். ஆனால் மிக மிக அவசரம் படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் அளவிற்கு அந்தப் படத்திற்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என காரணம் சொல்லப்பட்டது.
சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் வெறும் ஐந்து தியேட்டர்கள் மட்டுமே இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டன. அதிலும் சென்னையில் ஒதுக்கப்பட்ட இரண்டு தியேட்டர்கள் மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளன. அவையும் பிரதமர் வருகை காரணமாக இரண்டு நாட்களுக்கு படங்கள் ஓடாது என்று பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு நல்ல படத்தை வெளியிட எனக்கு விருப்பமில்லை. அதற்காக அடுத்த வாரம், அதாவது தீபாவளிக்கு முதல் வாரம் தியேட்டர்கள் எளிதாக கிடைக்கும் என்பதற்காக அந்த தேதியில் (அக்-18) இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முட்டாள்தனத்தையும் நான் செய்ய மாட்டேன். காரணம் அது எவ்வளவுதான் நல்ல படமாக இருந்தாலும் தீபாவளிக்கு முன்னரே தியேட்டரைவிட்டு நீக்கப்படும்.
இதே தியேட்டர்கள் நான் ரிலீஸ் செய்யப்போகும் சங்கத்தமிழன் படத்தை வாங்க இப்போதிருந்தே ஆர்வம் காட்டுகின்றனர்.. காரணம் அது பெரிய படம்.மிக மிக அவசரம் படத்தை போல இன்னும் சிறந்த கதையம்சம் கொண்ட கிட்டத்தட்ட எட்டு சிறிய பட்ஜெட் படங்களை நான் ரிலீஸ் செய்வதற்காக விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன்.ஆனால் இப்போது மிக மிக அவசரம் படத்திற்கு ஏற்பட்ட இதே நிலைதான் அந்தப் படங்களுக்கும் ஏற்படும் என்பது நன்றாகவே தெரிகிறது. வேறுவழியின்றி அந்த படங்களை எல்லாம் வாங்கியவர்களிடமே திருப்பி கொடுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். இனி சின்ன பட்ஜெட் படங்களையே தயவுசெய்து எடுக்காதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு சூழல் உருவாகிவிட்டது.
இந்த படத்தை தீபாவளிக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தடங்கள் இல்லாமல் ஒரு நல்ல தேதியில் ரிலீஸ் செய்தே தீருவேன். இப்படி சிறிய பட்ஜெட் படங்கள் நல்லபடியாக ரிலீஸ் செய்வதற்கு அரசாங்க தரப்பிலிருந்து உதவி செய்வதாக பத்திரிக்கையாளர்கள் சிலர் எனக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். அதன்மூலம் அரசாங்கத்தின் உதவியையும் நான் நாடுவதற்கு முயற்சி எடுக்க போகிறேன்.சினிமாவை வெறும் வியாபாரமாக பார்த்து பணம் மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளோடு இதில் நுழைந்தவன் அல்ல நான். நல்ல படங்களை வெளியிட்டு எனது நிறுவனத்திற்கு ஒரு நல்ல பெயரை பெறவேண்டும், அதன் பிறகு லாபம் என்பது இரண்டாம் பட்சம் என்கிற எண்ணத்தோடு இந்தத் துறைக்கு வந்தவன் என்று தனது வேதனையை வெளிப்படுத்தினர்.
இதையும் வாசிங்க: 'பெட்ரோமேக்ஸ்' படத்திலுள்ள சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் - தமன்னா