இயக்குநர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ஆம் தேதி நடத்துவதென பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் ஜீலை 21ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் அலுவலர் வழக்கறிஞர் செந்தில்நாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டுமென இயக்குநர் ஜெகநாத் (எ) கே.பி. ஜெகன் தொழிலாளர் நலத்துறை ஆணையர், இணை ஆணையரிடம் புகார் அளித்தார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலரை மாற்றக்கோரிய புகாரை பரிசீலிக்க வேண்டி வழக்கும் பதிவு செய்திருந்தார்.
அந்தப் புகார் மனுவில், இயக்குநர் பாரதிராஜாவை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தது, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மனு நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒவ்வொரு சங்கத் தேர்தலின் போதும் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகுவது வாடிக்கையாகிவருகிறது. மேலும், இது உரிமையியல் சார்ந்த வழக்கு என்பதால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.