தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்படும் குற்றவாளிகளிடமிருந்து காவலர்களுக்குக் கரோனா தொற்று பரவிவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் ஆகியோருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், "குற்றவாளிகளைத் தேவையான பட்சத்தில் மட்டுமே காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கைது நடவடிக்கை குறித்து காவல் உட்கோட்ட அலுவலர் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்நலப் பிரச்னை உள்ள குற்றவாளிகளைக் கைதுசெய்வதை முடிந்தவரையில் நிறுத்த வேண்டும். கைது நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடும்போது குறைந்த எண்ணிக்கையிலான காவலர்கள் செல்ல வேண்டும்.
குறிப்பாக, 50 வயதிற்கு மேல் உள்ள காவலர்கள் கைது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டாம். கைதுசெய்த குற்றவாளிகளை அழைத்துச் செல்ல காற்றோட்டம் நிறைந்த மினி பேருந்துகளை காவலர்கள் பயன்படுத்த வேண்டும். கைது நடவடிக்கைகளில் காவலர்கள் ஈடுபடும்போது பிபிஇ கிட், முகக்கவசம், சானிடைசர் ஆகியவை பயன்படுத்த வேண்டும்.
குற்றவாளிகளுக்கும் முகக்கவசம், சானிடைசர் வழங்க வேண்டும். பின்னர் கைதுசெய்யப்பட்டவுடன் குற்றவாளியை தெர்மல் ஸ்கேனர் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.