இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு அருகில் உள்ள சோனாபத்ரா மாவட்டத்தில் ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்ற 24 டிராக்டர்களில் வந்த வன்முறைக் கும்பல் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கிறார்கள்.
ஆதிவாசிகள் நீண்ட காலமாக தங்களிடமிருந்த நிலத்தை அபகரிக்க முயன்ற வன்முறையாளர்களை தடுத்த காரணத்தினால் இத்தகைய படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
சோனாபத்ரா படுகொலையை கேள்விப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முயற்சி செய்திருக்கிறார்.
அவரும், அவருடன் வந்த காங்கிரஸ் கட்சியினரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சந்திக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டதால், பிரியங்கா சாலை மறியல் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்குகூட உரிமை மறுக்கப்படுகிறது. இந்த ஜனநாயக விரோதச் செயல் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். உத்தரப் பிரதேச மாநிலம் குற்றங்கள் நடைபெறுவதில் இந்தியாவிலேயே முதன்மை இடத்தை பெற்றுவருகிறது.
இதைவிட ஒரு அவமானம் பாஜகவுக்கு இருக்க முடியாது. வகுப்புவாத அரசியல் செய்து, வாக்கு வங்கியை விரிவுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாஜகவிடம் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்க்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.