சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள நாப்ரோஸ் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம், கடந்த மூன்று மாதங்கள் முன்பு, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என சமூக வலைதளங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தளங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இதைப் பார்த்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச்சேர்ந்த ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த இளைஞர்களிடம் ஆவணம் சரிபார்த்தல், கட்டணம் என பல்வேறு தவணைகளில் பணம் பெற்றுள்ளனர். ஒவ்வொருவரிடமும் அவர்களது வேலைக்கு ஏற்றார்போல், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெற்றுள்ளனர்.
வேலை பெற்றதற்கான ஆணை மற்றும் வெளிநாடு செல்வதற்கான விசா உள்ளிட்டவைகள் தயாராக இருப்பதாகவும், பணம் செலுத்திய அனைவரும் இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே நிறுவனம் வழங்கிய விசா சரிவர இல்லை என கேட்டபோது, வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் பிரச்னை இருப்பதாகவும், இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து விண்ணப்பித்த அனைவரும் கடந்த 28ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளனர். நாப்ரோஸ் அலுவலகத்துக்கு வந்து பார்த்தபோது அலுவலகம் பூட்டி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தொடர்பு கொண்ட அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், தாங்கள் ஏமாற்றப்பட்டது இளைஞர்களுக்கு தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தங்களிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாயை நாப்ரோஸ் நிறுவனம் மோசடியாக பறித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வெளிநாடுகளில் வேலை எனக்கூறி இலங்கைவாசிகளை சென்னை அழைத்து வந்தவர் கைது