சென்னை: ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் காலியாக இருந்த இடங்களை சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாமாக முன்வந்து நிரப்பின. ஆனால், இதனை ஏற்க மறுத்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் கவுன்சிலிங் இல்லாமல் சேர்க்கப்பட்ட மாணவர் இடங்கள் சட்டவிரோதம் எனத் தெரிவித்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவில், “கலந்தாய்வு மற்றும் மறு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்ற உத்தரவு இளங்கலை மருத்துவப் படிப்புக்கு மட்டுமே பொருந்தும். ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
மேலும், இந்த விவகாரத்தில் கல்லூரிகள் தங்களது எல்லைக்கு உள்பட்டே செயல்பட்டிருக்கின்றன. எனவே, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளில் காலியாக இருந்த இடங்களில் நிரப்பப்பட்ட மாணவர் சேர்க்கை செல்லும். எனவே, வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
அதேநேரம், ஏற்கெனவே தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் நிறுத்திவைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பருத்தி நூல் விலை உயர்வு - கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டம்!