தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் விளம்பரப் பலகைகள் அனுமதி, தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி இல்லையென, சென்னை மாநகராட்சி சட்டத்தில், 2018ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை ஹோர்டிங் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மாநகராட்சி நிலத்தில் மட்டும் விளம்பரம் வைக்க அனுமதி வழங்குவதும், தனியார் இடங்களில் அனுமதி மறுப்பதும், அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும், தனியார் இடங்களிலும், அரசு இடங்களிலும் விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக தனித்தனி சட்டங்கள் இயற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அரசு கூறும் வாதம் தவறானது எனவும், அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் எனவும் மனுதாரர் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல்.சுந்தரேசன் வாதிட்டார்.
ஆனால், விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தில் எந்த பாரபட்சமும் இல்லை எனவும், சட்டவிரோத டிஜிட்டல் பேனர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் எனக் கூறி கைது செய்யப்பட்ட 2 பெண்கள் பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!