சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். கடந்த 20ஆம் தேதி நடுக்குப்பம் 5ஆவது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஐவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து தூக்கி வீசினர். இதில் குமரேசன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கமல் (37), ஜான்சன் (22), கார்த்திக் (23), கீதன் (23), அக்பர் அலி (21) ஆகியோரே குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கஞ்சா போதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே பெட்ரோல் பாட்டில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ஐவருக்கும், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு மதுராந்தகம் கிளைச் சிறையில் நேற்று (ஜூன் 24) அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட கமலுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மதுராந்தகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் கமல் உயிரிழந்துள்ளார்.
கமலின் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்தது சிறைக் கைதி என்பதனால், நீதித் துறை நடுவர் விசாரணை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கும்பல்: போலீஸ் விசாரணை!