தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கும் சட்டம், நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு கல்லூரியில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தொழிற்கல்வியில் இடஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தாக்கல்செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டத்தின் மூலம் 7.5 விழுக்காடு முன்னுரிமை வழங்கியுள்ளதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் இடம் கிடைக்கும்.
முன்னுரிமை
பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்குப் பொறியியல் படிப்புகளில் பிஇ, பிடெக், பிஆர்க் ஆகிய பாடப்பிரிவிலும், பிஎஸ்சி, பிஎஸ்சி (ஹானர்ஸ்), பிடெக் ஆகிய பாடப்பிரிவில் வேளாண்மைப் படிப்பிலும், கால்நடை மருத்துவப் படிப்பில் பிவிஎஸ்சி கால்நடை மருத்துவம், பிடெக் பாடப்பிரிவிலும், பி.எஃப்.எஸ்சி., பிடெக் மீன்வளப் படிப்பிலும், பிஏ எல்எல்பி, பிகாம் எல்எல்பி, பிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி ஆகிய ஹானர்ஸ் படிப்புகளிலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மாநில ஒதுக்கீட்டு இடமான 69 விழுக்காடு ஒதுக்கீட்டில் 2021-22ஆம் கல்வியாண்டில் வழங்கப்படும். மேலும் ஒரு கல்லூரியில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை