தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அவை பின்வருமாறு:
- தொடக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கொண்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாளை ஒதுக்கீடு செய்து தகுந்த இடைவெளியை பின்பற்றி மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
- ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலும் சேர்வார்கள். எனவே அவர்கள் சேர உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே மாணவர்கள் படித்த பள்ளியில் இருந்து பட்டியலைப் பெற்று தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் சேர்வதற்கு அருகிலுள்ள பள்ளியிலிருந்து மாணவர்களின் பெற்றோர், செல்போன் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு அம்மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாளில் சேர்க்கை செய்வதற்கு தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளியில் சேர உரிய ஆவணங்களில் ஏதேனும் ஓர் ஆவணம் இல்லை எனில் சேர்க்கை செய்த பின்னர் அச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தலைமை ஆசிரியர்கள் உரிய வகுப்பாசிரியர்கள் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
- தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடமிருந்து உரிய விண்ணப்பம் பெற்று 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் நேரில் வருகை புரியவில்லை என்றாலும் பெற்றோர்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் சேர்க்கை செய்ய வேண்டும்.
- மாணவர் சேர்க்கை நடைபெறும் தேதி, விவரங்களை அறிவிப்பு பலகையில் நாள், நேரத்தை குறிப்பிட்டு வெளியிடுவதுடன், அன்றைய நாளில் தகுந்த இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும்.
- மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், சுகாதார பணிகளை முடித்து பள்ளி முறையாகச் செயல்படுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்களிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள், ஏனைய கல்விசார் விலையில்லா பொருட்கள் வழங்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.