சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காகவும், தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னை கோவை இடையே புதிதாக இயங்க இருக்கும் வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைப்பதற்காகவும், சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காகவும் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் 8 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
அங்கு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன விமான நிலைய முனையத்தை பிரதமர் பார்வை இடுகிறார். அதன் பின்பு பிரதமர் சென்னையில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையார் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார்.
அங்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் சென்னை - கோவை - சென்னை இடையே அதிவிரைவு ரயிலை தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் வந்து அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன் பின்பு மீண்டும் காரில் ஐஎன்எஸ் அடையார் சென்று, அங்கிருந்து இந்திய விமான படை ஹெலிகாப்டரில் பல்லாவரம் இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் கம்பெனி பின்புறம் உள்ள ராணுவம் மைதானத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து சென்னை விமான நிலையம் புதிய முனையத்தை தொடங்கி வைக்கிறார்.
அந்த விழாவை முடித்துவிட்டு பிரதமர் மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்பு பிரதமர் நரேந்திர மோடி இரவு தனி விமானத்தில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக டெல்லியில் இருந்து எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் நேற்று ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். அவர்கள் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை பழைய விமான நிலையத்தில் எஸ்பிஜி, ஐஜி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பிரதமரின் சென்னை நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது திட்டமிடப்பட்டுள்ள, பிரதமரின் நிகழ்ச்சிகளின் நேரங்களில், சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பிரதமர் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை நகருக்குள் சாலை வழி பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.