டெல்லி: சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்படவுள்ளது. அதன் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அழைப்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கான நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவிருந்த முதலமைச்சர் சென்னை விமான நிலையம் சென்றார். ஆனால் அவர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணத்தை ஒத்திவைத்துவிட்டு இன்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் ஆயிரம் படுக்கைகளுடன், 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க, திரௌபதி முர்முவிற்கு முறையாக அழைப்பிதழ் வழங்கினார்.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தருவதாக குடியரசுத் தலைவர் முர்மு உறுதியளித்துள்ளார். அதன்படி, ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் முர்மு சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.