சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல அரசியல் கட்சிகள் உதவிவரும் நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று(டிச.7) நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னையில் மிக்ஜாம் புயலினால் இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒட்டுமொத்த மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. கடும் புயலினால் இணையத்தளம், மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டதால் எந்த உதவியுமின்றி கடும் சிரமத்திற்கு ஆளானர்.
இதையடுத்து நான்காவது நாளாக இன்று(டிச.7) சென்னையில் தொடர்ந்து வெள்ள மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இன்னும் குளம்போல் காட்சியளித்து வருகின்றன. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலம் மீட்புக்குழுக்களும், தன்னார்வலர்களும் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்களில் இருந்து, சாமாணிய மக்கள் வரை அனைவரும் உணவு, அத்தியாவசிய பொருட்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(டிச.7) நேரில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கட்சிகளும் தொடர்ந்து களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(டிச.7) நேரில் சந்தித்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "ஒரு நாள் மழைக்கே சென்னை முடங்கிவிட்டது. கோடைக்காலத்தில் நீர் இல்லை என கூறும் அரசு எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் உள்ளது. புழல் ஏரி உடையும் அபாயத்தில் உள்ளது என்பதை கேள்விபடும் போது நெஞ்சம் பதறுகின்றது. நீர் நிலைகளை தூர்வராமல், தடுப்பணைகள் இல்லாமல் இருப்பது அரசின் அலட்சியத்தை காண்பிக்கிறது.
பால், மின்சாரம் இல்லாமல் ஒட்டு மொத்த சென்னையே பாதித்துள்ளது. 10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்து இருந்தால் சென்னையின் நிலைமை என்னாவாகி இருக்கும். மழை நின்ற உடன் அரை மணி நேரத்தில் மழை நீர் வடிந்துவிடும் என மேயர் கூறினார். ஆனால் 4 நாட்கள் ஆகியும் மழை நீர் வடியாமல் இருக்கிறது. கடல், மழைவெள்ளத்தை உள்வாங்கவில்லை என்பதை ஏற்க முடியவில்லை. மக்கள் தொடர்ந்து சிரமத்தில்தான் இருக்க வேண்டுமா" என தன் கண்டனங்களை பதிவு செய்தார்.
தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "கேப்டனின் உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. இன்னும் ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என்ற நல்ல செய்தி கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புயல் கடந்தும் வெள்ளம் வடியவில்லை..! வதைப்படும் வடசென்னை மக்கள்!