சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 10 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் துறை உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டதட்ட 5 நாள்கள் பணி நடைபெற்று கொண்டு வந்த நிலையில் நேற்று (மே 8) முதியவர் கண்ணையன் என்பவர் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இவரின் இழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இன்று திரண்டு கருப்பு கொடி, பதாகைகளை ஏந்தி தொடர்ந் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பிரேமலதா விஜயகாந்த் மக்களிடம் நிலவரத்தை கேட்டறிந்தார். தொடர்ந்து உயிரிழந்த கண்ணையனின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவிந்த சாமி காலனியில் சுமார் 60 ஆண்டு காலமாக குடியிருந்த மக்களை அராஜக போக்கில் அகற்றி அனைத்து மக்களும் தெருவில் நிற்கும் அவல நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது. 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம். ஒரு வருடத்தில் திமுக அரசு என்ன சாதனையை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் வாழ்கிற மக்கள் அகதிகளாக வாழ்கிற ஒரு நிலையை பார்க்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. உண்மையான முதலமைச்சராக இருந்தால் ஆர்.ஏ.புரம் மக்களை நேரில் சந்திக்க வரவேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் விளம்பரங்களுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இங்கே உள்ள வீடுகள் கால்வாயில் இருந்து 45 அடி தள்ளி அமைந்துள்ளன. கால்வாய்க்கு அந்தபுறம் 15 அடியில் வீடுகள் உள்ளன.
மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் சமயத்தில் மின் தடை, தண்ணீர் தடை, வீடு இடிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்களுக்கு மாற்றுவழியை ஏற்படுத்திவிட்டு வீடுகளை இடித்திருக்க வேண்டும். ஒரு முதலாளிக்காக திமுக அரசு துணை நிற்கின்றது. இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுல இருக்குற பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன' - சீமான்