சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்வதற்கு முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் நடக்காத வகையில் திமுக தடுத்தது. திமுகவினர் தோல்வி பயம் காரணமாகத் தேர்தலைத் தடுக்க முயல்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நிச்சயமாக நடக்கும். அதிமுகவுடன் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
அதிமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேச தேமுதிக குழு அமைத்துள்ளது. அதிமுக குழு அமைத்தபின் அந்த குழுவுடன் பேசி எந்தந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வோம்’ என்றார்.
மேலும், தெலங்கானா என்கவுண்டர் சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ‘தவறு செய்தவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது. அந்த பெண் என்ன தவறு செய்தார். இது போன்று கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் என்ற நிலை வரும். என்கவுண்டர் செய்தது தவறு இல்லை. யார் தவறு செய்தாலும் தண்டனைக்குரியவர்கள்தான்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி வாரியாக விஜயகாந்த் பரப்புரை - பிரேமலதா