பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சுமார் 40 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்திலிருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17ஆவது உதவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரசாத் ஸ்டுடியோ வில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ளவும், தன்னை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இளையராஜா நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஸ்டுடியோவுக்குள் சென்று பொருள்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக விளக்கமளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரசாத் ஸடூடியோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய இசையமைப்பாளர் இளையராஜவை அனுமதிக்க நாங்கள் தயார். ஆனால், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை இளையராஜா வாபஸ் பெற வேண்டும்.
பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர், மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்று தனது கைப்பட இளையராஜா நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அனுமதிப்போம் என தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரசாத் ஸ்டூடியோ விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு (டிசம்.23) நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு