சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரையில் நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், '11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரையில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவிற்கு நடத்தப்பட வேண்டும்.
இதற்கான வெற்று மதிப்பெண்கள் பட்டியலை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், செய்முறைத் தேர்விற்கான முதன்மைக் கண்காணிப்பாளர்களை வேறு பள்ளியில் இருந்து நியமிக்க வேண்டும்.
மேலும், செய்முறைத்தேர்வுகளை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்த வேண்டும். மதிப்பெண் விவரங்களை அரசுத்தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், மே மாதம் 14ஆம் தேதிக்குள் தேர்வுத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.