காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை சட்டவிரோதமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ளது. இதை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகரை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "காவிரி டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சட்டவிரோதமாக 300-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்துள்ளது.
அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவு தேவைப்படும் என்று கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை மீறி சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.
காவிரியில் தற்போது வெளியேவரும் உபரிநீரை எடப்பாடி பகுதிக்கு மட்டும் திருப்பி விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உபரி நீரைத் தேக்குவதற்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் நேரடியாக காவிரி நீரை அந்தப் பகுதிக்கு திருப்பிவிட உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்.
இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.