சென்னை: அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரின் செயலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், 'காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து பேரழிவு ஏற்படுத்தும் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, 2020ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டா அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர், நன்னிலம், பெரியகுடி கிராமத்தில் மூடப்பட்ட கிணறுகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அமைத்து வருகிறது.
கடந்த வாரம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மூலம் முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்தோம். மறுநாள் பெரியகுடி கிணறு உடனடியாக மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவை மீறி கிணறு அமைப்பதற்கான மறைமுக அனுமதி அளித்தது யார்?
இதனைக்கண்டித்து வரும் 15ஆம் தேதி மன்னார்குடியில், சுதந்திர உறுதிமொழி ஏற்று உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். அரசியல் கட்சிகளைச்சந்தித்து ஆதரவு கோர இருக்கிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறேன். எங்களோடு இணைந்து கடந்த 10 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி உள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் அச்சப்படும் நிலை இன்று காவிரி டெல்டாவில் ஏற்பட்டுள்ளது’ என கவலைத்தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு; மருத்துவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு