கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யப்படாமல் உள்ளது. ஆகவே வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு, மீதித் தொகைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்தது.
இந்த உத்தரவை ரத்துசெய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி பில்லாகவும், மீதி யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான பில்லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீடுப்படி, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கப்படுவதாக கூறி, அதற்கான விளக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் மின்சார ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மின் கணக்கீடு செய்யாததால், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழ்நாடு அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணிநேரங்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்துள்ளது” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், ஊரடங்கு காலத்தின்போது, பொதுமக்கள் அலுவலகம் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்து, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு இன்று (ஜூலை 15) மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்து தொடரப்பட்ட இவ்வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின் அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மின் கட்டணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!