சென்னை: பவர் பேங்க் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால், குறைந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி நூற்றுக்கணக்கானோர் இந்த பவர் பேங்க் முதலீட்டின், முதலீடு செயலியில் தங்கள் பணத்தை முதலீடு செய்து மோசடி கும்பலின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.
ஆண்ட்ராய்டு செல்போன்களில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்யப்படும் பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் மோசடி கும்பல் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
சிபிசிஐடி காவல் துறை விசாரணை
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கானோர், பணத்தை இழந்துள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் அளித்துவந்த நிலையில், தமிழ்நாட்டிலும் பவர் பேங்க் செயலியால் பாதிக்கப்பட்ட பலரின் புகார்கள் குவிந்தன.
இந்த மோசடியில் வட மாநில மோசடி கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே, காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான சிபிசிஐடி காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றது.
ரூ.110 கோடி மோசடி - டெல்லி சைபர் கிரைம் அதிரடி
இந்நிலையில் பவர் பேங்க் செயலி உள்பட 110 போலி நிறுவனங்கள் பெயரில் போலி செயலிகளை உருவாக்கி அதன்மூலம் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து சீன நிறுவனங்களுக்கு அனுப்பியதாக அவிக் கெடியா, ரொனாக் பன்சால் உள்பட 11 பேரை டெல்லி சைபர் கிரைம் காவல் துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது.
குறிப்பாக கணக்காயர்களான அவிக் கெடியா, ரொனாட் பன்சால் ஆகிய இருவரும் தனது கூட்டாளிகளுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதைக் கண்டறிந்த, டெல்லி சைபர் கிரைம் காவல் துறை அவர்களை கடந்த ஜூன் மாதம் கைதுசெய்தது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறை பவர் பேங்க் மோசடி கும்பலின் முக்கியக் குற்றவாளியான சி.ஏ. பட்டதாரி அவிக் கெடியாவை விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றனர்.
நீதிமன்றம் விசாரிக்க அனுமதி
பின்னர் பவர் பேங்க் மோசடி கும்பலின் முக்கியக் குற்றவாளியான அவிக் கெடியாவை சென்னை அழைத்துவந்த சிபிசிஐடி காவல் துறை அவரை சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்றத்தில் முன்னிறுத்தி காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். அவர்களை 2 நாள்கள் விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அவிக் கெடியாவிடம் நடத்தப்படும் விசாரணையில் தமிழ்நாட்டிலும் எத்தனை பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும், இங்குள்ள அவர்களது கூட்டாளிகள் யார் யார் என்பது குறித்தும் கண்டறிந்து அவர்களையும் கைதுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சிபிசிஐடி காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாரியாத்தா சொல்றேன் ஊசி வேணாம் - செவிலியரை சாமி ஆடி துரத்திய மூதாட்டி