கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இச்சூழலில் ஜூன் 1ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், ஆசிரியர் கூட்டமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. 200 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குப் படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வின்போது மாணவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல், தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை, 10ஆம் வகுப்பு தேர்வை நடத்தக் கூடாது. எனவே தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஸ்டாலின் ராஜா, ”நாளுக்கு நாள் கரொனா பாதிப்பு அதிகரிக்கிறது. அதை அரசு கருத்தில் கொள்ளாமல் பொதுத்தேர்வை அறிவித்துள்ளது. பெற்றோர், குழந்தைகளை அனுப்பப் பயப்படுகின்றனர். பள்ளிக் குழந்தைகள் எந்த அளவிற்கு தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவர் என்பது தெரியவில்லை. அதனால், சிபிஎஸ்இ போல தேர்வை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கலாம்” என்று வாதிட்டார்.
மேலும் அவர், ”ஜூன் மாதம் தேர்வு நடத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பல மாநிலங்கள் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. சில மாநிலங்களில் தேர்வுகள் ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதையே தமிழ்நாடு அரசும் பின்பற்ற உத்தரவிட வேண்டும்” எனவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , ”கல்வியாண்டு ஏற்கனவே தள்ளிபோய்விட்டது. பெற்றோர், ஆசிரியர் சங்கமோ, ஜாக்டோ - ஜியோ போன்ற அரசு ஆசிரியர் சங்கமோ நீதிமன்றத்தை நாடவில்லை. மாணவர் அல்லது பள்ளித் தரப்பில் யாரும் வழக்கு தொடரவில்லை. அரசு உத்தரவால் பாதிக்கப்படாத வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என, மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு திரும்பப்பெறப்பட்டதையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் பதிலாக அரசிற்கு வருவாயை ஏற்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்!