சென்னை: 2018-19 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்துகொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 1500 நபர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை.
அதனால் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின் கீழ் தங்களுக்கு பணி வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
காத்திருக்கிறோம்
அதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திப்பதற்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை இன்று (ஆக.10) சென்னை வந்தனர்.
ஆனால் அவர் இல்லாததால், காவல்துறையினர் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்குமாறு ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் அருள்செல்வி, “கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் வழங்கப்படும் எனக் காத்திருக்கிறோம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற குளறுபடியால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 1500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. உங்கள் தொகுதியில் முதல்வர் பரப்புரையின்போது ஈரோடு, திருவண்ணாமலையில் நாங்கள் முதல்வரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தோம்.
தற்போது அவர் ஓசூர் வந்த போதும் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பணி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வசதிகள்