இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், "இந்திய அஞ்சல் துறையின், தமிழ்நாட்டு பிரிவிற்கான, கணக்காளர்கள் தேர்விற்கான அறிவிப்பை கடந்த 4ஆம் தேதி சென்னை மண்டல தலைமை தபால் துறை அலுவலர் வெளியிட்டார். இந்தத் தேர்வு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்படுவதாகவும், அந்தத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, தாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாகவுள்ளது. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் நிலை பணியாளர்களுக்கான அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரி, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறவிருந்த தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் விரைவில் தேர்வு நடத்தப்படும் என உறுதியளித்தீர்கள். நீதிமன்றத்திலும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடத்த உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இந்த இரண்டிலும் உறுதிமொழியை அஞ்சல் துறையினர் முழுமையாக மீறியுள்ளனர். இது தமிழகத்தில் பணிபுரியும் லட்சகணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்வில் இது மிகப் பெரிய பேரிடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில், தமிழ் மொழி பயின்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, மிகப்பெரிய அநீதி மட்டுமில்லாமல், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறான கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும்.
மேலும், தமிழ் மொழி மற்றும் தமிழ் இளைஞர்களின் உணர்வை மதிக்கும் வகையிலும், மாநிலங்களவையில் தாங்கள் அளித்த உறுதிமொழியை பாதுகாக்கும் வகையிலும், தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்டும் அவமானத்தையும் உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழ்மொழி வாயிலாகவும் கணக்காளர்களுக்கான தேர்வு நடத்தபடுமென புதிய அறிவிக்கை வெளியிட்டு இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையும் பாதுகாக்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.