சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை கடந்த 18ஆம் தேதி முதல் பெற்று வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை அரசு உத்தரவின் அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாத வகையில் இணையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 45 வயதிற்கு மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தாங்களும் விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தாங்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கும் வரை விண்ணப்பங்கள் பெறக் கூடாது எனவும், இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடாது என அரசாணை வெளியிட்ட போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் முந்தைய அரசு வெளியிட்ட அரசாணையை பின்பற்றி ஆசிரியர் தேர்வு நடைபெறுவது மிகவும் வருத்தமாக இருப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உடல் வலி நிவாரண மாத்திரையில் போதை - விற்பனை செய்த இருவர் கைது