சென்னை: போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரிவிஸ்வநாத் (28), கடந்த மாதம் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஜூலை மாதம் 29ஆம் தேதி தனது வைஃபை டெபிட் கார்டு தொலைந்து விட்டதாக கூறிப்பிட்ட அவர், அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தனது கார்டை பயன்படுத்தி ரூ.15ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளதாகவும், அதன் பிறகு அந்த கார்டை வங்கியில் கூறி பிளாக் செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மதுரவாயல் ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ராஜா சிங், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கே.கே. நகரை சேர்ந்த சரவணன் (28), என்பவரை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், " காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் காதல் திருமணம் செய்துகொண்டு தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயம் சம்பந்தமான பிரச்னை இருந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதற்காக தன்னிடமிருந்த பணம் முழுவதையும் செலவு செய்த சரவணன், போதிய வருவாய் இல்லாத காரணத்தால் நூதன முறையில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். சரவணன் ஏற்கெனவே வங்கியில் வேலை செய்து இருந்ததால்தான் புதிதாக தொழில் தொடங்கப்போவதாக கூறி தனது நண்பரின் பெயரில் ஸ்வைப்பிங் மெசினை வாங்கி உள்ளார்.
பின்னர், ஒவ்வொரு ஏடிஎம் மையங்களுக்கும் சென்று அங்கு வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் வைஃபை ஏடிஎம் கார்டுகளை ஸ்வைப்பிங் மெசின் அருகே காட்டி பணம் எடுத்துள்ளார். வைஃபை ஏடிஎம் கார்டுகளை ஸ்வைபிங் மிஷன் அருகே காட்டினால் ரகசிய எண் ஏதும் தேவையில்லை. ஒருமுறைக்கு ரூ.2 ஆயிரம் வரை எடுக்கலாம். இதுபோல், பல ஏடிஎம் கார்டுகளில் இருந்து இதுவரை சுமார் ரூ.10 லட்சம் எடுத்திருப்பது தெரியவந்தது" என்றனர்.
இவரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடமிருந்து 12 வைஃபை ஏடிஎம் கார்டுகள், ஸ்வைபிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்