சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ, 4 ஆவது தெருவைச் சேர்ந்தவர் சந்திர சேகர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மீனா (23), தனியார் கல்லூரியில் படித்துவந்தார்.
பெற்றோர்கள் இன்று (செப்.21) வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் மீனா மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர்களது வீட்டின் மேல் தளத்தில் கட்டுமான பனி நடந்துவருவதால் வேலைக்கு ஆள்கள் வந்துள்ளார்களாக என்பது குறித்து கேட்க மீனாவிடம் தனலட்சுமி செல்போனில் தொடர்பு கொண்டபோது மீனா எடுக்கவில்லை.
செல்போனை மீனா எடுக்காததால் அருகில் இருந்தவரை வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு தனலட்சுமி கூறியுள்ளார்.
அதன்படி அருகிலிருந்தவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வெளியே இருந்த இரும்புக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள் பக்கம் இருந்த மரக் கதவை திறந்து சென்று பார்த்தபோது கத்திரிகோலால் கழுத்தில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீனா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி காவல் துறையினர் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்த மீனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்பின் காவல் துறையினர் விசாரணை செய்ததில் மீனா அணிந்திருந்த 2 சவரன் நகை, செல்போன் காணவில்லை. கட்டிட வேலைக்கு காலையில் வந்த நபர் வேறு ஒருவரை அழைத்து வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவரது செல்போனும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே கொலைக்கான காரணம்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை செய்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட மீனா வீட்டில் கட்டிட வேலை செய்து வந்த கொத்தனார் சண்முகம் வீட்டில் இருந்து மீனாவின் செல்போன், சட்டையை கைப்பற்றினர்.
மீனா வீட்டில் கட்டட வேலை செய்துவந்த சண்முகம் மீனாவை கத்திரிக்கோளால் குத்தி கொலை செய்து மீனா அணிந்து இருந்த தங்க நகை, செல்போனை கொள்ளை அடித்து தலைமறைவானது தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள சண்முகத்தை கைதுசெய்ய தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.