சென்னை: பூந்தமல்லி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு தங்கி ஸ்ரீபெரும்புதூர், திருமழிசை பகுதிகளில் செயல்படும் சிப்காட்களில் மக்கள் வேலை செய்துவருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி திருடு போய் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை அடையாளம் தெரியாத நபர்கள் சர்வ சாதாரணமாக திருடி கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் மோட்டார் சைக்கிள் திருடர்களை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தற்போது பூந்தமல்லி டிரங்க் சாலையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகளின் முகப்புகள் உடைக்கப்பட்டுள்ளதால் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் உள்ளன.
இதனைச் சாதகமாக பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை திருடி செல்பவர்கள் பூந்தமல்லி டிரங்க் சாலை வழியாக செல்கின்றனர். தினந்தோறும் பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் திருடு போவது வாடிக்கையாகிவிட்டதால் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து பூந்தமல்லி போலீசார் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலைத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்!