சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். "ஐந்து காட்சிகளில் நடித்து அப்படம் ரூ.500 கோடி வசூலித்தது என்பது எவ்வளவு பெரிய விஷயம்" என பார்த்திபன் கூறினார்.
"ரொம்ப மகிழ்ச்சி நீங்கள் இங்கு வந்ததற்கு. அனைத்து மீடியாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நல்ல படத்தை நீங்கள் கொண்டு சேர்த்துள்ளீர்கள். ரொம்ப நன்றி. உலக அளவில் அனைத்து மீடியாவும் கொண்டாடினர். அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியவில்லை. மனதிற்கு அத்தனை மகிழ்ச்சியாக உள்ளது. இது வெற்றியல்ல ஒரு வாழ்த்து. மணிரத்னத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அவருக்கு எதாவது செய்ய வேண்டும். அவரைப் பற்றி நிறைய பேச வேண்டும். அவரை மகிழ்விக்க வேண்டும்" என ஜெயம் ரவி கூறினார்.
"படத்தின் முதல் நாள் காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. கோவிலுக்கு சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. புது அனுபவத்தை கொடுத்தது. பத்து ஆண்டுகள் கழித்து இதுகுறித்து பேசலாம். படத்தை புரொமோஷனுக்கு சென்றது தனி அனுபவம். ஏற்கனவே வெற்றிபெற்ற கதையை நாம் எடுக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. சின்ன சின்ன நுணுக்கங்களையும் நீங்கள் கண்டுபிடித்து எழுதியது மகிழ்ச்சியாக இருந்தது. மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. ஏஆர்.ரகுமானுக்கு மிகப் பெரிய நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப்போவது இல்லை. ஆனால் மணிரத்னம் அந்த கனத்தை தோளில் சுமந்து வெற்றிபெற்றுள்ளார்" என கார்த்தி கூறினார்.
"நான்பேசவேண்டிதை ரவியும் கார்த்தியும் பேசிவிட்டனர். இப்படத்தை பற்றி என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் பத்தாது. ரசிகர்களின் வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சி செய்தேன். இது ஒரு உணர்ச்சி தான். கதையை படமாக பார்க்கும் போது மிகப்பெரிய விஷயம். இப்போது நிறைய பேர் புத்தகம் படிக்க தொடங்கி உள்ளனர். இப்படத்தின் கதாபாத்திரம் பற்றி எல்லோருக்கும் கற்பனை முகம் இருந்து இருக்கும். அந்த முகங்கள் எல்லாம் இப்போது எங்களது முகமாக மாறிவிட்டது. மணிரத்னத்திற்கு நன்றி. கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் எங்களை வந்து சேர்ந்துள்ளது. படக்குழுவினருக்கும் நன்றி" என விக்ரம் கூறினார்.
"எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இதை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒரு கனவு இருக்கு இதை பற்றி. அதனை படமாக செய்வது என்பது பேராசை நான் அந்த பேராசை பட்டுவிட்டேன். அதற்கு அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஷ்கரனுக்கு நன்றி. இரண்டு நிமிடத்தில் இதற்கு அனுமதி கொடுத்தார். நடிகர் நடிகையர்களுக்கு நன்றி. மொத்த படக்குழுவினருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். இத்தனை பேர் உழைத்துள்ளனர். எனக்கே சிலசமயம் பயம் வந்துள்ளது. எல்லோரும் என்னை நம்பி வேலை செய்துள்ளனர். பின்னாடி தான் வேலை செய்துள்ளனர். ஆனால் கடுமையான ஒத்துழைப்பு செய்துள்ளனர்" என மணிரத்னம் கூறினார்.
கல்கி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை மணிரத்னம் மற்றும் சுபாஷ்கரன் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கூறும்போது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது இயக்குநர் மணிரத்னம் கையில்தான் உள்ளது. அடுத்த ஆண்டு முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் வெளியாகலாம் என்றார்.
இதையும் படிங்க: வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே.. ரஞ்சிதமே...' பாடல் வெளியானது