திருவண்ணாமலை: சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய மூன்று மாணவர்களின் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில், ஒரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயங்களுடன் உயிருக்குப் போராடிய இரு மாணவர்களை மீட்ட வேட்டவலம் காவல்துறையினர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தியில் அனுப்பி வைத்தனர். இவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் முத்துலிங்கம், ராமு, ஜெகதீஷ் ஆகிய மூவர் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூவரும் நேற்று செவ்வாய்கிழமை (நவம்பர் 19) மாலை பள்ளி முடித்துவிட்டு வேட்டவலத்தில் இருந்து தளவாய்குளம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆவூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இறந்த மாணவர், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்த வன்னியன் மகன் முத்துலிங்கம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சின்னஓலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் ராமு, இசுக்கழிகாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க |
உயிரிழந்த முத்துலிங்கத்தின் உடலை மீட்ட காவல்துறையினர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை குறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எப்படி பைக்கை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர் எனவும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை பெற்றோரோ, ஆசியர்களோ ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக பைக்கில் மூவர் பயணித்தது பெருங்குற்றம் எனக் கூறும் இவர்கள், இது தொடர்பாக காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் உயிரைவிட்டு, பெரும் துயருக்கு பெற்றோர்களை மாணவர்கள் ஆளாக்குகின்றனர் எனவும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.