சென்னை தி.நகரில் அமைந்துள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திமுக ஆட்சிக்கு வருவதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்தக்கட்சியும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்காது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசு நினைப்பதாக மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் சொல்லிவருகின்றன. அது குறித்து விளக்க வேண்டிய இடத்தில் திமுக தான் உள்ளது.
அதில் தயக்கம் உள்ளது என்றால் திமுகவின் மடியில் கனம் உள்ளது என்று தான் அர்த்தம். முரசொலி அலுவலக இட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கண்டறிய வேண்டும். பஞ்சமி நிலத்தை வைத்திருப்பதை விட பாவச்செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை திமுக வெளியிட வேண்டும். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பது தெரியவந்தால் அதனை மீட்டு பட்டியலின சகோதரர்களிடம் ஒப்படைக்கும் பணியில் பாஜகவும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் ஈடுபடும்’ என்றார்.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசும் செயல்படுகிறது' - மு.க.ஸ்டாலின்