சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "பூத் வாரியான பணிகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்து, 2024 தைப்பொங்கல் வரும்போது தமிழ்நாடு பாஜக, தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய வகையில் அடிமட்டத்திலிருந்து பலம் பெற்ற நிலையில் உருவாக்குவதை இலக்காகக் கொண்டு பணிகள் பகிரப்பட்டுள்ளன.
அதிமுக பாஜக கூட்டணி அப்படியே தான் உள்ளது. அதில் எந்த விதமான மாறுதல்களும் இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே குறிப்பிட்டது போலவே உள்ளது. அதில் எந்த கருத்தும் சொல்வதற்கு ஏதுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய வகையில் திட்டங்களை வகுத்து, அதற்குரிய பணிகளை ஜனவரி மாதம் இறுதிக்குள்ளாக தயார் நிலையில் இருக்க பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு சட்டமன்ற உறுப்பினர். திமுகவினர் ஆட்சியில் உள்ளனர். அதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது நல்லதா கெட்டதா என்பது இனி தான் தெரியும். தமிழ்நாடு எந்த அளவிற்கு விழிப்போடு இருக்கிறது என்பதை வரக்கூடிய சில மாதங்களுக்குள்ளாக மக்கள் உணர்த்துவார்கள்" என கூறினார்.
இதையும் படிங்க: உதயநிதியை விட திறமையானவர்கள் திமுகவில் உண்டு: காடேஸ்வரா சுப்பிரமணியம்