சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும், பிற மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற மூன்று கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்வதற்காக 19 ஆயிரத்து 226 மாணவர்களும், பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர 1212 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
கலந்தாய்வு
சிறப்பு பிரிவான விளையாட்டு மாணவர்களுக்கு வரும் 12 ஆம் தேதி ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்காக 435 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24 ஆம் தேதி வரை விண்ணப்பித்த கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்