திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்கிற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கருணாநிதியின் வீட்டிலிருந்து பரப்புரையைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்தார். மண்ணச்ச நல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார் என பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் உதயநிதி பேச்சு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் தொல்லை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று (ஜனவரி 22) விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை, ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதேபோல திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் இணையத்தில் நடுவே தொடர்ந்த வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.