சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம்தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் திமுக கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அரசியல் கட்சியினர் வித்தியாசமான பல்வேறு முறைகளில் வாக்குசேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் ஈடுபட்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சியினருடன் கட்சித்துண்டு போட்டுக்கொண்டு குழந்தைகள் சிலரும் கோஷமிட்டு செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை பயன்படுத்துவது புதிதல்ல. சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ அல்லது இடைத்தேர்தலோ எதுவாக இருந்தாலும் உள்ளூரில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் அங்குள்ள குழந்தைகளையும் பள்ளி மாணவர்களையும் தங்களது பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இது ஆண்டாடாக தொடர்கதையாகி வருகிறது. வீதிப்பிரச்சாரங்களில் மட்டுமல்லாமல் வாக்குச்சாவடிகளிலும் மக்களிடம் வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினர் பள்ளி மாணவர்களை பயன்படுத்துகின்றனர்.
தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் காலை, மாலை அரசியல் கட்சிகளின் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். அவர்கள் காலை, மாலை கட்சிக் கொடிகளை ஏந்தி பிரசாரம் செய்தால், நாளொன்றுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக தெரிகிறது. சுமார் ஒரு வாரமாக இது தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இது தவிர வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்வதற்காக தங்களது கட்சித் தலைவர்கள் போல உடைகளை அணிவித்து பேரணியில் கலந்து கொள்ள செய்கிறார்கள். தங்களது கட்சிகளுக்கு ஆதரவாக கவர்ச்சியான கோஷங்களை எழுப்பியும் வாக்கு சேகரிக்கச் செய்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது. இருந்தபோதிலும், அரசியல் கட்சிகள் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து வருவது கவலையளிப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் பி.மோகன் கூறுகையில், "சிறார் நீதிகள் (பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு) சட்டத்தின் படி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பக் கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, குழந்தைத் தொழிலாளர்களாகவே கருதப்படும். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்.
மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் பிரச்சாரத்தின் போது கட்சி தொண்டர்களின் தவறான வழிகாட்டுதலால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மதுகுடிப்பது, புகை பிடிப்பது போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற அரசியல் பிரச்சாரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.
குழந்தைகள் நல ஆர்வலர் முரளி பேசும்போது, "தேர்தல் ஆணையம் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களை கண்காணித்து, எந்த அரசியல் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக குழந்தைகளை பயன்படுத்துகிறதோ அந்த கட்சியின் மீது தேர்தல் ஆணையத்தில் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் இது மாதிரியான சம்பவங்களை ஒழிக்க முடியும்.
தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் குழந்தைகளை ஈடுபடுத்துவது வாடிக்கையாகிவிட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நலக் குழுமம், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மாணவர்களை ஈடுபடுத்துவது குற்றம். ஆனால், எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. பிரச்சாரம் மற்றும் பிற வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி மாணவர்களை ஈடுபடுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: ஆளுநர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது - சி.பி.ராதாகிருஷ்ணன்