திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவல்.வெ.ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்பு வலிமையாக இருக்க வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றார். இந்தியாவிலேயே கூலிப்படைக்கு ஜாமீன் கொடுக்கும் கட்சி திமுக மட்டும்தான் என்றும், என்னைப் போல லட்சக்கணக்கான விவசாயிகள் எதிர்காலத்தில் பதவிக்கு வருவார்கள் என்றும் கூறினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட இந்த அரிய வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் பொதுமக்கள் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் எனக் கூறினார்.
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டிய வைகோ, கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம் ஏற்றும் அவலநிலை உள்ளதாகவும் விமர்சித்தார். மத்திய, மாநில அரசுகள் ஊழல் புதை மணலில் சிக்கியிருப்பதாகவும் வைகோ புகார் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அதேபோல், பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்புரை செய்தார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பொன்.ராஜா, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஏழுமலை ஆகியோரை ஆதரித்து, பரப்புரை செய்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்களவைத் தேரதலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார்.
மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பரப்புரை நிகழ்த்தினார். அப்போது, 14 வயதில் அரசியலுக்கு வந்த நாள் முதல் மக்களோடு மக்களாக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.