சென்னை: இந்தியாவில் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குழந்தைகளுக்கு 6 வாரத்திலும், 14 வாரத்திலும் இரண்டு தவணைகளாக போலியோ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவை அரசின் வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போலியோ தடுப்பூசியில் மூன்றாம் தவணையும் செலுத்த வேண்டியது அவசியம் என போலியோ ஒழிப்பு நிபுணர் குழு தெரிவித்தது. அதன்படி ஒன்பது மாத குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை போலியோ தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று(ஜன.4) முதல் ஒன்பது மாத குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை போலியோ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபெல்லா நோய்க்கு எதிரான எம்.ஆர் தடுப்பூசி செலுத்தும்போது, போலியோ மூன்றாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் இடது கையில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இனிமேல், 6 வாரங்கள், 14 வாரங்கள், 9 மாதங்கள் என மூன்று தவணைகளில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கர்ப்பிணிகளும், 9.16 லட்சம் குழந்தைகளும் அரசின் தடுப்பூசி திட்டத்தில் பயனடைகின்றனர். கர்ப்பிணிகளுக்கு 12 தடுப்பூசிகளும், குழந்தைகளுக்கு 11 தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: 'பணி பாதுகாப்பு வழங்குக' - டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்ஆர்பி செவிலியர்கள்!