சென்னை: கடந்த 13 ஆம் தேதி குருவியாக வேலை பார்க்கும் அழகுராஜா என்பவரிடம் 30 லட்ச ரூபாய் பணத்தை , வாகன சோதனை செய்வதாக கூறி காவல் துறையினர் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் சென்று 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அழகுராஜா எக்ஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு பிறகு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், முதற்கட்டமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் 30 லட்சம் ரூபாய் கொண்டு வந்த அழகுராஜா மீது சந்தேகப்பட்டு விசாரணையை தொடங்கினர். தனிப்படை காவல் துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், அரை மணி நேரத்தில் ஆயுதப் படை காவலர் செந்தில் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கொள்ளையடித்த பணம் குறித்து காவலர் செந்தில் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜ்குமார் என்பவர் காரில் இருந்த 27.50 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை கும்பல் விவகாரத்தில் காவலர் செந்தில், ராஜ்குமார் மற்றும் கண்ணன் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க சென்றவர்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்கு அனுப்பும்போது பல்வேறு பிடித்தங்கள் போக பணம் குறைவாகவே குடும்பத்துக்கு செல்கிறது என்கிற காரணத்தினால், ஹவாலா முறையில் உண்டி என்கிற முறையில் அவர்கள் சம்பாதித்த பணத்தை அங்கிருந்து சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்வது தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தை வட சென்னை பகுதியில் இருக்கும் ஹவாலா தரகர் மூலமாக இந்திய பணமாக மாற்றி வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களின் குடும்பங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் பல்வேறு குருவிகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கென தனியாக whatsapp குழுக்கள் அமைக்கப்பட்டு பல கோடி ரூபாய் மாதா மாதம் வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் பணம் ஹவாலா மூலம் பரிவர்த்தனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
அந்தக் குழுவில் இருக்கும் பசுபதி மற்றும் அழகுராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் சொந்த ஊரான முஷ்டகுறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் பார்க்கும் வேலை குறித்து ராஜ்குமாரிடம் கூறும்போது, திட்டமிட்டு குருவிகள் கொண்டு வரும் பணத்தை கொள்ளையடிக்க கும்பல் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் whatsapp குழுவில் இருக்கும் பசுபதி என்பவர் உதவியோடு குருவிகள் எந்தெந்த நேரத்தில் எவ்வளவு பணத்தை எந்த வழியாக எடுத்துச் செல்கிறார்கள் என்ற தகவலை, ராஜ்குமாரிடம் தெரிவித்து கொள்ளையடிக்க கூறியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கண்ணன் என்ற டிராவல்ஸ் நடத்தும் நபரிடமிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து குருவிகள் பணம் கைமாறும்போது ஆள் வைத்து கொள்ளையடிக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். அதிலும் காவல் துறையைச் சேர்ந்த நண்பர் யாராவது இருக்கிறார்களா என தேடியதின் அடிப்படையில் அதே ஊரைச் சேர்ந்த நண்பரான காவலர் செந்திலை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். ஹவாலா பணம் என்பதால் பறி கொடுத்தவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள் எனவும் காவலர் என்பதால் சந்தேகம் வராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை தீட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதற்கு ஏற்றார் போல் அழகுராஜா கடந்த 13 ஆம் தேதி 30 லட்சம் ரூபாய் பணத்துடன் வரும்போது மன்றோ சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபடுவது போல நாடகம் ஆடி காவலர் செந்தில், அழகுராஜாவிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததோடு அழகுராஜாவையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அதன் பின் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குறிப்பாக அவர் தங்கியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு அருகில் அழகுராஜா இறக்கிவிட்டு விசாரணை அழைக்கும்போது ஆஜராக வேண்டும் எனக் கூறி காவலர் செந்தில் 30 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்றுள்ளார்.
கொள்ளைப் போன பணம் ஹவாலா பணம் என்ற காரணத்தினால் புகார் கொடுக்காமல் இரண்டு தினங்கள் அமைதியாக இருந்து விட்டு அதன் பின் தனக்கு பணம் கொடுத்த ஹவாலா தரகர் அழுத்தத்தின் காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. தொடந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அரை மணி நேரத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
குறிப்பாக கொள்ளையடித்த பணத்தில் காவலர் செந்தில் தனது மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தவும், வீட்டிற்கு தேவைக்காகவும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. ராஜ்குமார், கண்ணன் பணத்தை பங்கிட்டு கொண்டு காரை பழுது பார்க்க செலவிட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொள்ளையடித்த 27.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்பு உடையவர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட காவலர் செந்தில் மற்றும் ராஜ்குமார், கண்ணன் ஆகியோரை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து ஹவாலா பரிமாற்றம் குறித்தும் எஸ்பிளனேடு காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை