அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே, மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு நடிகை தரப்பிலிருந்தும், காவல் துறை தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக மணிகண்டன் அமைச்சராக இருந்தவர் என்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாரங்களை அழிக்க நேரிடும் என்ற அடிப்படையில் வாதம் முன்வைக்கப்பட்டதால், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து மணிகண்டனை பிடிப்பதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரையில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'பரணி மூலம் தூது, சட்டப்பேரவைக்குள் உலா, கருக்கலைப்பு, கொலை மிரட்டல்' - நடிகை சாந்தினி பரபரப்பு புகார்!